காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக நடித்து வரும் நடிகர் சூரியின் நடிப்பில், சமீபத்தில் வெளியான ‘கருடன்’ திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து, ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் கவனிக்கப்படும் காமெடி நடிகராக உயர்ந்தார் சூரி. தொடர்ந்து ‘மனம்கொத்தி பறவை’, ‘தேசிங்கு ராஜா’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்த சூரி, முன்னணி நடிகர்களின் நண்பராகவும் முக்கிய கேரக்டரில் நடித்து புகழ்பெற்றார்.
காமெடி நடிகராக தொடர்ச்சியான வெற்றிப் படங்களை கொடுத்த சூரி, வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘விடுதலை’ படத்தின் மூலம் கதாநாயகனாக மாறினார். கடந்த ஆண்டு வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. சூரியின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களும் குவிந்தது.
அதனைத் தொடர்ந்து, சூரி நாயகனாக நடித்த இரண்டாவது படம் ‘கருடன்’. ‘காக்கிச்சட்டை’, ‘கொடி’ போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் துரை செந்தில் குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். சசிகுமார் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தில், மலையாள நடிகர் உன்னி முகுந்தன் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சூரி ‘சொக்கன்’ என்ற கேரக்டரில் நடித்துள்ள இந்த படம் கடந்த மே 31-ந் தேதி வெளியானது.
விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கருடன்’ படம், வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதுவரை 27 கோடிக்கு மேல் வசூலித்துள்ள ‘கருடன்’ படம், தமிழகத்தில் மட்டும் ரூ 20 கோடி வசூலித்துள்ளது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கும் சூரி, அடுத்து ‘விடுதலை 2’ மற்றும் ‘கொட்டுக்காளி’ படங்களில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களும் தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களாக மாறியுள்ளன.